ரூ.5 லட்சம் மோசடி செய்த தபால் ஊழியர் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த தபால் ஊழியர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி லதா (வயது 50). இவருடைய வீட்டின் மாடியில் நல்லாப்பாளையம் குளக்கரை வீதியை சேர்ந்த முருகனின் 2-வது மனைவி விண்ணரசி ராணி என்கிற மேரி (33) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர், தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் லதாவிடம் சென்று எனது கணவர் முருகன் கண்டாச்சிபுரத்தில் உள்ள தபால் நிலையத்தில் வேலை செய்து வருவதாகவும், உங்கள் மகன் சிவகுருவிற்கு அவர் அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய லதா, கண்டாச்சிபுரம் தபால் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த முருகனிடம், தனது மகன் சிவகுருவிற்கு வேலை வாங்கித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு முருகன், லதாவிடம் உங்கள் மகனுக்கு தபால் நிலையத்தில் போஸ்ட்மேன் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என்றும் கூறினார்.
ரூ.5 லட்சம் மோசடி
இதையடுத்து விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வைத்து முருகனிடம் லதா ரூ.30 ஆயிரத்தை முதலில் கொடுத்தார். பின்னர் முருகன், அவரது மகன் பிரபு (35), விண்ணரசி ராணி ஆகியோரிடம் நேரிலும், அவர்களது வங்கி கணக்கு மூலமாகவும் மீதமுள்ள ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை வெவ்வேறு தவணைகளில் லதா செலுத்தியுள்ளார். ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்ட முருகன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து லதாவின் மகன் சிவகுருவிற்கு தபால் நிலையத்தில் வேலை வாங்கித்தராமலும், வாங்கிய பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்.
பின்னர் இதுகுறித்து முருகன் உள்ளிட்ட 3 பேரிடமும் சென்று லதா, தான் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி வற்புறுத்தி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 3 பேரும் சேர்ந்து லதாவை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
தபால் ஊழியர் கைது
இதுகுறித்து லதா, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் முருகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தபால் ஊழியர் முருகனை நேற்று, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் முருகனை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் பிரபு, விண்ணரசி ராணி ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.