ஊராட்சி கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்

ஊராட்சி கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்;

Update: 2022-02-11 14:08 GMT
கோத்தகிரி

கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுஹட்டி ஊராட்சியில் இன்று தலைவர் கிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சங்கர், மனோகரன், கணேசன், மாலதி, காஞ்சனா, நதியா ஆகியோர் திடீரென கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் தலைவர் முறைப்படி கூட்டத்தை நடத்துவது இல்லை, வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்வது இல்லை, கூட்டம் நடத்தாமல் உறுப்பினர்களின் வீடுகளுக்கே சென்று தீர்மான புத்தகத்தில் மட்டும் கையெழுத்து வாங்குகிறார், அவரது செயல்பாடுகள் சரியாக இல்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் 5-வது வார்டு உறுப்பினர் உமாவை பதவி நீக்கம் செய்யக்கூடாது, துணைத்தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மனு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் கூறும்போது, ஊராட்சி கூட்டம் முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது. 5-வது வார்டு உறுப்பினர் உமா தொடர்ந்து 4 கூட்டங்களில் பங்கேற்காததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. அடுத்த கூட்டத்தில் கணக்குகள் சமர்ப்பிக்கப்படும். துணைத்தலைவரை மாற்ற போதுமான உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்றார்.

மேலும் செய்திகள்