வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.

Update: 2022-02-11 14:08 GMT
ஊட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது. 

நகர்ப்புற தேர்தல்

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 294 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இதில் 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 291 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. மொத்தம் 1,253 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

தேர்தலையொட்டி வாக்குச்சாவடி வாரியாக 491 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இன்று ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான காந்திராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சின்னம் பொருத்தும் பணி

முதலில் பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் வார்டு வாரியாக அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னம் பொருத்தும் பணி நடந்தது. இதை செய்வது எப்படி? என்பது குறித்து பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன என்ஜினீயர்கள் விளக்கினர். அதன்படி 8 மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்துடன் கட்டுப்பாட்டு எந்திரத்தை இணைத்து வேட்பாளர் பெயர், சின்னத்தை பொருத்தினர். 

தொடர்ந்து வேட்பாளர் பெயருக்கு நேராக உள்ள பட்டனை அழுத்தினால் சம்பந்தப்பட்ட சின்னம் பதிவாகிறதா? என்று சரிபார்க்கப்பட்டது. 36 வார்டுகளில் போட்டியிடும் 198 வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்ட எந்திரங்களின் எண் குறித்த அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 

உறுதி செய்ய வேண்டும்

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
ஊட்டி நகராட்சியில் 82 வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தும் 82 வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தப்பட்டன. இதேபோல் பிற 3 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பொருத்தப்பட உள்ளது. 

வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் சரியாக இயங்குகிறதா? என்று மண்டல அலுவலர்கள் உறுதி செய்து தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டும். வாக்குச்சீட்டு பட்டியலை பொருத்தும் பணியின்போது சந்தேகம் இருந்தால், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன என்ஜினீயர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்