திருவள்ளூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
திருவள்ளூர் அருகே லாரி சக்கரத்தில் சி்க்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் செக்கடி தெரு பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரப்யூதின். இவரது மகன் தமிம் அன்சாரி (வயது 18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். காக்களூர் பைபாஸ் சாலை, கம்பர் தெருவை சேர்ந்தவர் நவீன் (22). இவர் திருவள்ளூர், பஜார் வீதியில் உள்ள பூ கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திருவள்ளூரில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் ஈக்காடு அருகே செல்லும்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து செங்குன்றத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியின் மீது மோதியது.
இதில் இருவரும் கன்டெய்னர் லாரியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்த டிரைவர் கன்டெய்னர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த புல்லரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் சாலை விபத்தில் இறந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.