ஆவணங்கள் இன்றி ரெயிலில் கொண்டு செல்ல முயன்ற 19¾ கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
ஆவணங்கள் இன்றி ரெயிலில் கொண்டு செல்ல முயன்ற 19¾ கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சூரமங்கலம்:
சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் பாபு தலைமையில் பாதுகாப்பு படையினர் நேற்று மாலை 6 மணியளவில் சேலம் ரெயில் நிலையத்தில் 5-வது நடைமேடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் ஒருவர் கைப்பையுடன் நடைமேடையில் நடந்து வந்தார். அவரை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சேலம் சிவதாபுரம் சின்னகுட்டி தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்த கைப்பையில் வெள்ளி பொருட்கள் ஏராளமாக இருப்பது தெரியவந்தது, அதற்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை என தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் கொச்சுவேலி-கோர்பா ரெயில் மூலம் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்திற்கு வெள்ளி பொருட்களை கொண்டு செல்ல இருந்தார். மேலும் அவர் ரெயிலில் செல்வதற்கான டிக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து அவரை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஆனந்த் குமாரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து அந்த பேக்கில் இருந்த வெள்ளி பொருட்களை எடை போட்டு பார்த்தனர். அந்த வெள்ளி ஆபரணங்களின் மொத்த எடை 18¾ கிலோ இருந்தது. அதன் மதிப்பு ரூ.12 லட்சத்து 18 ஆயிரத்து 750 ஆகும். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் குமார், மேல் நடவடிக்கைக்காக வருமான வரித்துறை அதிகாரி ரவிக்குமாரிடம் வெள்ளி ஆபரணங்களை ஒப்படைத்தனர். இதனை ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஜி.எஸ்.டி. தொகையாக ரூ.73 ஆயிரத்து 126-ஐ கண்ணனுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர்.