‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு நாடகமாடுகிறது-வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு நாடகமாடி வருவதாக வாழப்பாடியில் நடந்த அ.தி.மு.க.. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம்:
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு நாடகமாடி வருவதாக வாழப்பாடியில் நடந்த அ.தி.மு.க.. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பேளூர் ஆகிய பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வாழப்பாடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் திமு.க. ஆட்சியில் தமிழகம் இருண்ட மாநிலமாக மாறிவிட்டது. மக்களுக்கு எந்த பலனும், நன்மையும் கிடைக்கவில்லை. கொலை, கொள்ளை என தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. நிர்வாக திறமை இல்லாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
விளம்பர அரசியல் செய்கிறார்
தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்ற விரக்தியில் நான் பேசுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவிக்கிறார். நான் ஒருபோதும் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என விரும்பவில்லை. அதற்கு ஆசைப்பட்டதும் கிடையாது. முதல்-அமைச்சராக எனக்கு கிடைத்த பொறுப்பு மற்றும் பணியை என்னால் எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அந்த அளவிற்கு செய்துள்ளேன். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நீங்கள் முதல்-அமைச்சராக ஆகியுள்ளீர்கள்.
நாட்டு மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டியது உள்ளது. ஆனால் தினமும் சைக்கிளில் செல்வது, நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, டீக்கடையில் டீ குடிப்பது என மு.க.ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டிருக்கிறார். உடல் வலிமையாக இருப்பது அவசியம் தான். அதற்காக அவர் விளம்பர அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இதை தான் கடந்த 9 மாதங்களாக பார்த்து வருகிறோம்.
ரூ.500 கோடி ஊழல்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். அந்த வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் முதன் முதலாக ரூ.100 மற்றும் பொங்கல் பொருட்களை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அதன்பிறகு நான் முதல்-அமைச்சராக வந்தபோது 2020-ம் ஆண்டில் ரூ.1,000 பொங்கல் பரிசாகவும், அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பொருட்கள் அனைத்தும் தரமாக இருந்தன.
ஆனால் தற்போது தி.மு.க. அரசு பொங்கலுக்கு 21 வகையான பொருட்களை வழங்கியது. இவற்றில் ஒரு சில பொருட்களை தவிர பெரும்பாலான பொருட்கள் தரமில்லை என மக்களே கூறுகிறார்கள். பொங்கல் பொருட்களை எடுத்து செல்வதற்காக ஒரு பை வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் அவற்றின் விலை ரூ.30 மட்டுமே. அந்த பையின் மூலம் ரூ.30 கோடி ஊழல் நடந்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதன் மூலம் ரூ.500 கோடிக்கு ஊழல் நடந்திருக்கிறது.
நீட் தேர்வு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் அவரிடம் கேட்டால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தங்களிடம் ரகசியம் உள்ளதாக கூறுகிறார். பிறகு அந்த ரகசியத்தை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியது தானே? பின்பு ஏன் அ.தி.மு.க.வை அழைக்கிறீர்கள்.
2010-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ்- தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தான் நீட் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தி.மு.க.வை சேர்ந்த காந்திசெல்வன் என்பவர் மத்திய மந்திரியாக இருந்தார். இதை யாராலும் மறக்க முடியாது. ஆனால் தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு நாடகமாடி வருகிறது. நீட் தேர்வு விலக்கு என்பதே அ.தி.மு.க.வின் முடிவு ஆகும்.
பல்வேறு திட்டங்கள்
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சி தலைவரும், பொதுமக்களும் என யாருமே கோரிக்கை வைக்காத பட்சத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தேன். இதன் மூலம் 541 அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி உள்ளது. இது அ.தி.மு.க. அரசின் சரித்திர சாதனையாகும். அதுமட்டுமின்றி மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் சொன்ன வாக்குறுதியை மறந்து விடுவார்கள். அது தான் தி.மு.க. தற்போது சில வாக்குறுதிகளை மட்டுமே கண் துடைப்புக்காக நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவிதொகை, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், ஓய்வூதியம் அதிகரிப்பு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள். ஆனால் எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
பட்டை நாமம்
அதே போல 5 பவுனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்த நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 48 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் கடன் வைத்து உள்ளார்கள். ஆனால் வெறும் 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதி 35 லட்சம் பேரின் நிலைமை என்ன? அவர்கள் தற்போது நிர்க்கதியாக நிற்கிறார்கள். தேர்தலில் வாக்கு கேட்கும் போது 5 பவுனுக்கு கீழ் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து தானே ஓட்டு கேட்டீர்கள். ஆனால் அவர்களுக்கு தி.மு.க. தற்போது பட்டை நாமம் போட்டு விட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டது. ஆனால் தற்போது தில்லு முல்லு செய்து தி.மு.க. எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. மக்களை சந்தித்து அவர்களது ஆசி இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறலாம். அந்த வகையில் அ.தி.மு.க..வுக்கு மட்டுமே மக்கள் செல்வாக்கு உள்ளது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது. அதனால் ஏதாவது அவதூறு கூறினால் அதை நம்ப வேண்டாம். எனவே கடந்த 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் தைரியமாக எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதைத்தொடர்ந்து தம்மம்பட்டியில் கொங்கு திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், தம்மம்பட்டி, கீரிப்பட்டி, செந்தாரப்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தும், அவர்களுக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.