சேலம் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி-ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

சேலம் மத்திய சிறையில் இரட்டை கொலை வழக்கு கைதி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-02-10 22:48 GMT
சேலம்:
சேலம் மத்திய சிறையில் இரட்டை கொலை வழக்கு கைதி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தூக்கில் தொங்கினார்
சேலம் மாவட்டம் ஏற்காடு தெப்பக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜேஸ்வரன் (வயது 27). இவரை கடந்த ஆண்டு இரட்டை கொலை வழக்கு தொடர்பாக ஏற்காடு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
இந்த நிலையில் நேற்று மாலை விஜேஸ்வரன் சிறையில் 1-வது பிளாக்கில் தனது அறையில் இருந்த கிரீல் கம்பியில் துண்டை கட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பிளாக்கில் உள்ள சக கைதிகள் சத்தம் போட்டனர். இதையடுத்து அங்கு வந்த சிறை வார்டன்கள் விஜேஸ்வரனை மீட்டு சிறை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதிகாரிகள் விசாரணை
அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கைதி விஜேஸ்வரன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜேஸ்வரன் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்