மின்சாரம் தாக்கியதில் செத்துப்போன குட்டியுடன் தாய் குரங்கு பாசப்போராட்டம்
செல்லக்கெரேயில் மின்சாரம் தாக்கியதில் செத்துப்போன குட்டியை தாய் குரங்கு தூக்கிச் சென்ற படி பாசப்போராட்டம் நடத்தி வரும் சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.;
சித்ரதுர்கா:
சோக சம்பவம்
விலங்குகளை சுற்றியே மனிதர்களின் வாழ்க்கையும் அமைந்துள்ளது என்றால் மிகையல்ல. மனிதர்களின் வாழ்வியலோடு பல்லுயிர்கள் பின்னி பிணைந்துள்ளது. மனிதர்களை போலே பரிவு, அன்பு, தாய்மையை குட்டிகளுடன் விலங்குகள் பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகளும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதுபோல் தனது குட்டிகளை இழந்த விலங்குகள் பெத்த மனம் பித்து போல் கண்ணீரும் கம்பலையுமாக சுற்றித்திரியும்.
அதுபோல் ஒரு சோக சம்பவம் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே டவுனில் அரங்கேறி வருகிறது.
மின்சாரம் தாக்கி செத்த குட்டி குரங்கு
அந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு குட்டி குரங்கு மின்கம்பியை பிடித்து விளையாடியுள்ளது.
அந்த சமயத்தில் குட்டி குரங்கை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட குட்டி குரங்கு கருகி செத்துப்போனது.
தட்டி எழுப்பும் தாய் குரங்கு
ஆனால் இதனை அறியாத தாய் குரங்கு, தனது குட்டியை தன்னுடன் தூக்கிக் கொண்டு சுற்றி வருகிறது. குட்டி குரங்கு அசைவற்று கிடப்பதை பார்த்து தாய் குரங்கு தட்டி தட்டி எழுப்புகிறது.
பின்னர் மீண்டும் குட்டியை தூக்கிக் கொண்டு வீடுகள், கட்டிடங்கள் மீது தாய் குரங்கு அமர்ந்து அதனை தடவி கொடுக்கிறது.
பாசப்போராட்டம்
இவ்வாறு தனது குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு பாச மழை பொழிந்து வருகிறது. தாயிடம் இருந்து குட்டி குரங்கை சிலர் பறித்து அடக்கம் செய்ய முயன்றனர்.
ஆனால் யாரையும் அருகில் விடாமல் தாய் குரங்கு, செத்துப்போன குட்டியுடன் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த பாசப்போராட்ட காட்சியை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். அது தற்போது வைரலாகி காண்போரின் கண்களை குளமாக்கி வருகின்றன