ஆயுதங்களால் தாக்கி தம்பதி படுகொலை
சிக்பள்ளாப்பூர் அருகே, ஆயுதங்களால் தாக்கி தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிக்பள்ளாப்பூர்:
பிணமாக கிடந்தனர்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா டவுனை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 77). இவரது மனைவி பத்மாவதி (70). சீனிவாசலு துணிக்கடை நடத்தி வந்தார். இந்த தம்பதியின் 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. அவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை சீனிவாசலு வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது சீனிவாசலுவும், பத்மாவதியும் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
ஆயுதங்களால் தாக்கி கொலை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிட்லகட்டா டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சீனிவாசலு, பத்மாவதி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வீட்டின் ஜன்னல் கம்பியை முறித்து கொண்டு உள்ளே வந்த மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி தம்பதியை கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
ஆனால் அவர்களை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது தெரியவில்லை. கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து சிட்லகட்டா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிக்பள்ளாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.