தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் வாக்குபதிவு அலுவலர்களுக்கு நடந்த இரண்டாம் கட்டபயிற்சி வகுப்பினை கலெக்டர் அனீஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2022-02-10 20:48 GMT
வாடிப்பட்டி
தேர்தல் வாக்குபதிவு அலுவலர்களுக்கு நடந்த இரண்டாம் கட்டபயிற்சி வகுப்பினை கலெக்டர் அனீஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பயிற்சி வகுப்பு
மதுரையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நிர்மலாமேரி பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. 
அப்போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் கமல்கிஷோர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அறிவுரை
வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குபதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. மண்டல அலுவலர்கள் பேச்சியம்மாள், பொற்கொடி தலைமை தாங்கினர். பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும்முறை, தேர்தல் வாக்குபதிவு தொடர்பான படிவங்களை கையாளும்முறை, தேர்தல் வாக்குப்பதிவு விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை பார்வையிட்டு பயிற்சியினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். 
 அப்போது தேர்தல் வட்டார பார்வையாளர் செல்லத்துரை, தாசில்தார் நவநீத கிருஷ்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சிகள் என மொத்தம் 322 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 
மொத்தம் 1615 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குப் பதிவை சுமுகமான முறையில் நடத்திட ஏதுவாக 7,720 தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்  என கலெக்டர் தெரிவித்தார்.
190 பேர்
எழுமலை, டி.கல்லுப்பட்டி, பேரையூர் ஆகிய பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தலில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு பேரையூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில் மண்டல தேர்தல் அலுவலர்கள் மணிகண்டன், செல்வராஜ், ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி வகுப்பில் 190 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்களான முகமது ரபிக், சிவக்குமார், ஜெயதாரா ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்