மின்வயர்- பொருட்களை திருடிய 2 பேர் கைது

மின்வயர்- பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-10 20:35 GMT
விக்கிரமங்கலம்:

மின்வயர்கள் திருட்டு
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள அருள்மொழி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் வீரப்பன்(வயது 64). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஸ்ரீபுரந்தான் அருகே கொண்டாம்படுகை பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வீரப்பன் சென்றார். அப்போது வீரப்பனுக்கு சொந்தமான பம்புசெட் மோட்டார் கொட்டகையில் இருந்த சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்வயர்களை 3 பேர் சேர்ந்து திருடிக்கொண்டிருந்தனர். வீரப்பனை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து வீரப்பன் உடனடியாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சந்தேகத்தின்பேரில் ஸ்ரீபுரந்தான் வடக்கு தெருவை சேர்ந்த பழனிச்சாமி(52), அக்ரஹார தெருவை சேர்ந்த தாமரைக்கண்ணன்(23) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர்கள் மின்சார வயர்களை திருடியது தெரியவந்தது. மேலும் அவர்கள் வீரப்பன் பம்புசெட் அருகே உள்ள யோகநாதன் என்பவரது பம்பு செட் என்ஜினில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பேரிங் மற்றும் புட் வால்வு ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமி, தாமரைக்கண்ணனை ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணிமாறன் என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்