வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி வகுப்பு
தஞ்சை மாநகராட்சி தேர்தலில் ஈடுபடும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் 700 பேர் கலந்து கொண்டனர்.;
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி தேர்தலில் ஈடுபடும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் 700 பேர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி தேர்தல்
தஞ்சை மாநகராட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதில் 51 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு 196 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 282 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக தஞ்சை மாநகராட்சி 15 மண்டலமாக பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 597 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பு
இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி முதல் கட்ட பயிற்சி கடந்த மாதம் நடைபெற்றது. நேற்று 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
இதில் வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், வாக்குப்பதிவு எந்திரத்தை எவ்வாறு கையாள வேண்டும். வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் என்ன என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு முடிந்த உடன் வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் வாக்குப்பதிவு அலுவலர்கள் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர்
இந்த பயிற்சி வகுப்பை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.