அலங்கார ஊர்திகளுக்கு, வடுவூரில் கலெக்டர் தலைமையில் வரவேற்பு

குடியரசு தின விழாவில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகளுக்கு, வடுவூரில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-02-10 20:07 GMT
வடுவூர்:
குடியரசு தின விழாவில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகளுக்கு, வடுவூரில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடுவூர் வந்த அலங்கார ஊர்திகள்
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் விடுதலை போரில் தமிழகத்தின் பங்களிப்பினை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பங்கேற்ற 2 அலங்கார ஊர்திகள் திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் பார்வைக்காக மாவட்ட எல்லையான வடுவூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. வடுவூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் மலர் தூவி வரவேற்று பார்வையிட்டனர். 
தலைவர் உருவ சிலைகள் இடம்பெற்றன
2 அலங்கார ஊர்திகளில், ஒன்றில் மகாகவி பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், தியாகிகள் சுப்ரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகியோரின் உருவச்சிலைகள் இருந்தன.
மற்றொரு அலங்கார ஊர்தியில் தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், கர்மவீரர் காமராஜர், சமூக சீர்த்திருத்த செயற்பாட்டாளர் ரெட்டமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், தியாகி வ.வே.சு.அய்யர், காயித்தே மில்லத், காந்தியடிகளின் பொருளாதார பேராசிரியராகவும் சிறைத்தண்டனை பெற்றவருமான ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாக சீலர் கக்கன் ஆகிய தலைவர்களின் உருவச்சிலைகள் இடம் பெற்று இருந்தன.
மக்கள் பார்வையிட்டனர்
வடுவூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் மன்னார்குடி நோக்கி புறப்பட்ட அலங்கார வாகனங்களை வழியில் எடமேலையூர், செருமங்கலம், காரிகோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை பகுதிகளிலும் மக்கள் நின்று பார்வையிட்டனர்.
மன்னார்குடி
இதேபோல மன்னார்குடி வந்த அலங்கார ஊர்திகள் தேரடி திடலில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் பரதநாட்டியம், நாதஸ்வர இசை, தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ, மாணவிகளுக்கு அலங்கார ஊர்தியில் இடம்பெற்றுள்ள தேச தலைவர்கள் தொடர்பாக பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
வடுவூர் மற்றும் மன்னார்குடி பகுதியில் நடை பெற்ற நிகழ்ச்சிகளில் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், தஞ்சாவூர் மண்டல இணை இயக்குனர் (செய்தித்துறை) கிரிராஜன், மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ் செல்வன், மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம், நீடாமங்கலம் தாசில்தார் ஷீலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இரண்டு அலங்கார ஊர்திகளையும் மாலை வரை ஏராளமான மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்