தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2022-02-10 20:07 GMT
கும்பகோணம்:
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறினார்.
தேர்தல் பிரசாரம்
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆதரவு திரட்டி வருகிறார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நேற்று நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., அரசு தலைமை கொறடா கோவி செழியன், அன்பழகன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீட் தேர்வை திணித்தனர்
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பா. ஜனதாவிற்கு பயந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தில் நீட் தேர்வை திணித்தனர். இதனால் இதுவரை தமிழகத்தில் 16 மாணவ-மாணவிகள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் நலனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நிச்சயம் ரத்து செய்யப்படும் என தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. 
அதன்படி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக கவர்னருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் இந்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார். இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தி.மு.க. நிச்சயம் குரல் கொடுக்கும்
அடிமை அ.தி.மு.க. ஆட்சி போல இல்லாமல் தமிழக மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது அதை எதிர்த்து தி.மு.க. நிச்சயம் குரல் கொடுக்கும்.
கும்பகோணம் நகராட்சி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்கிற வகையில் கும்பகோணம் பகுதியில் மருத்துவ கல்லூரி ஏற்படுத்த வேண்டும். கும்பகோணம் பகுதி மாணவ- மாணவிகளின் நலன் கருதி என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்த வேண்டும், அடிப்படை தேவையான சாலை, குடிநீர், மின்சாரம், பாதாள சாக்கடை போன்ற வசதிகளை முறையாக ஏற்படுத்தி தரவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து நிறைவேற்றும்.
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
எனவே நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் வீடு, வீடாகச்சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் சுப.தமிழழகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் குட்டி தட்சிணாமூர்த்தி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அய்யம்பேட்டை, பாபநாசம்
முன்னதாக அய்யம்பேட்டை, மெலட்டூர், பாபநாசம், சுவாமிமலை, அம்மாப்பேட்டை பேரூராட்சிகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்தார். 

மேலும் செய்திகள்