பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்
கன்னியாகுமரி அருகே சாலையோரம் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே சாலையோரம் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
வேலை தேடி வந்தவர்கள்
ஆந்திர மாநிலம் அனந்தபுரி மாவட்டம் தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்தையன், கூலி தொழிலாளி. இவர் சில நாட்களுக்கு முன்பு வேலை தேடி தனது கர்ப்பிணி மனைவியான அருணா மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் கன்னியாகுமரிக்கு வந்தார்.
இங்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு தங்கியிருக்க வீடு கிடைக்காததால் கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் சாலையோரம் கூடாரம் அமைத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் கர்ப்பிணியான அருணாவிற்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அவர் வலியால் அலறி துடித்தார்.
ஆம்புலன்சுக்கு தகவல்
இதை கண்ட பொதுமக்கள் 108-ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் இருந்த நர்சு ஆதிலெட்சுமி, அருணாவை பரிசோதித்து பார்த்த போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அருணாவை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் அருணாவுக்கு வலி அதிகமானது.
நிலைமை மோசமடைந்ததை உணர்ந்த நர்சு ஆதிலெட்சுமி ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்த சொல்லி விட்டு, ஆம்புலன்சிலேேய பிரசவம் பார்த்தார்.
பெண் குழந்தை பிறந்தது
இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாயையும் குழந்தையையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தகுந்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய 108-ஆம்புலன்ஸ் நர்சு ஆதிலெட்சுமி மற்றும் டிரைவர் தர்மராஜ் ஆகியோரை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.