பெண் வேட்பாளர்கள் எங்கே?-அரசியல் கட்சியினரை திணறடித்த மகளிர் குழுவினர்

கறம்பக்குடியில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் எங்கே? என அரசியல் கட்சியினரை மகளிர் குழுவினர் கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-10 19:44 GMT
கறம்பக்குடி, 
கறம்பக்குடி பேரூராட்சி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 8 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகளில் பெரும்பாலும் வேட்பாளர்களின் கணவன், மகன், சகோதரர்களே ஓட்டு கேட்க செல்வதாக கூறப்படுகிறது.
மகளிர் சுய உதவி குழுவினர் கேள்வி
இதனால் அதிருப்தி அடைந்த மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள், இது பெண் வார்டு தானே? எங்கள் வேட்பாளர் எங்கே என கேட்டனர். மேலும், ஓட்டு கேட்கவே வேட்பாளரை அழைத்து வராதவர்கள் அவர்களை சுயமாக செயல்பட எப்படி அனுமதிப்பீர்கள்?. வேட்பாளர் யார் என தெரியாமல் எப்படி ஓட்டு போடுவது? என சரமாரியாக கேள்வி கேட்டனர். 
இதனால் அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சியினர் பெண் வேட்பாளருடன் வந்து ஓட்டு கேட்க வருவதாக கூறி சென்றனர்.
பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு
இதுகுறித்து மகளிர் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில், அரசு நிர்வாக கட்டமைப்பில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காகத்தான் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் பெண்கள் சார்பில் ஆண்களே நிர்வாகம் செய்து வருகின்றனர். ஓட்டு கேட்க கூட பெண்களை அனுமதிப்பது இல்லை. 
தற்போது பெண் வேட்பாளர்கள் ஓட்டுகேட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்