காட்பாடி அருகே காரில் வந்த 5 குற்றவாளிகளை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்
காட்பாடி அருகே குற்றவாளிகளை சுற்றி வளைக்கும் போது போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் பிடிபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.;
காட்பாடி
காட்பாடி அருகே குற்றவாளிகளை சுற்றி வளைக்கும் போது போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் பிடிபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
5 பேர் பிடிபட்டனர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவின் போது எந்தவித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக பழைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து ஒரு காரில் பழைய குற்றவாளிகள் காட்பாடி அருகே சென்று கொண்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர்கள் காட்பாடி அருகே உள்ள எல்.ஜி.புதூர் பகுதிக்கு சென்றனர். அங்கு ஒரு கார் பஞ்சராகி நின்று கொண்டிருந்தது. அந்த காரில் தான் பழைய குற்றவாளிகள் இருந்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது குற்றவாளிகள் தப்பி செல்வதற்காக போலீசாரை தாக்க முயன்றனர். அதில் ஒருவன் கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டும், ஒருவன் கார் கதவை உடைத்துக் கொண்டும் தப்பித்து ஓடினார்கள். ஐந்து பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
தகவல் கிடைத்ததும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகள் வந்த காரை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் பிடிபட்ட அவர்களை தனிப்படை போலீசார் காட்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவர்களில் ஒருவர் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த இம்ரான். எடப்பாடி பழனிசாமி முதல்-அணைச்சராக இருந்தபோது வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தநேரத்தில் இவர் துப்பாக்கி வைத்திருந்ததாக பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. அவருடன் பிடிபட்ட 4 பேர் சென்னையை சேர்ந்த பழைய குற்றவாளிகள்.
அவர்கள் கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் எதற்காக வேலூர் மாவட்டத்திற்கு வந்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.