தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
ராமநாதபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி பலியான நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி பலியான நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தில் பலி
ராமநாதபுரம் அருகே பெருவயல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பட்டணம்காத்தான் தமிழ்முருகன் (வயது 37), மாவட்ட கொள்கை பரப்பு துணை செயலாளர் சூரங்கோட்டை மீனாட்சிபுரம் சாத்தையா மகன் சதீஷ்குமார் (34) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி நடந்த விபத்தில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டிவந்த தமிழ்முருகனும் மோதி விபத்தை ஏற்படுத்திய புல்லங்குடி கண்ணன் மகன் வினித் (20) ஆகியோரும் படுகாயமடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டனர்.
சாலை மறியல்
இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் திட்டமிட்டு நடந்த கொலை என்றும், ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் அதன் எதிரொலியாக நடந்துள்ளது என்று கூறி உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று கூறி நேற்று காலை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகே திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
உறவினர்கள் மற்றும் கட்சியினர் சதீஷ்குமாரின் உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்துசென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து முக்கிய நபர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கை சந்தித்து நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து நேற்று பிற்பகலில் உடலை வாங்கி சென்றனர்.