வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கொள்ளை லாபம். அ.தி.மு.க. மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
வேலூர் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அ.தி.மு.க.வினர் கொள்ளை லாபம் பார்த்துள்ளனர் என்று வேலூரில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்
வேலூர் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அ.தி.மு.க.வினர் கொள்ளை லாபம் பார்த்துள்ளனர் என்று வேலூரில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி முன்னிலை வகித்தார். வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 60 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து பேசினார். வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தேர்தலில் சரிபாதி பெண்கள்
வேலூர் மாநகராட்சி தேர்தலில் 60 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதில், சரிபாதி பெண்கள் ஆவர். ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் கொள்கையின்படி பெண்கள் முன்னேற்றத்துக்கு அளித்துள்ள வாய்ப்பு தான் 50 சதவீதம் பெண் வேட்பாளர்கள். வீட்டிலே சமையலறையில் முடங்கி கிடந்து, குழந்தைகளோடு வாழ்க்கையை முடித்து கொண்ட பெண்கள் தற்போது நாட்டிற்கு பணியாற்ற இங்கு அமர்ந்துள்ளனர். அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 2 தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்று விட்டார்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளை லாபம்
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அது எங்கே போனது என்று தெரியவில்லை. தெருக்களை எல்லாம் தோண்டினார்கள் ஆனால் மூடாமல் போட்டு விட்டார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முடிக்கும் முன்பே அனைத்து பணிகளுக்கும் தொகை கொடுத்து விட்டார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளை லாபம் பார்த்துள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிறது. 8 மாதங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும், மக்கள் உயிரை காப்பாற்றுவதிலும் சென்று விட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்று பல்வேறு மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர் புகழாரம் சூட்டுகின்றனர். ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி மு.க.ஸ்டாலினிடம் கற்று கொள்ளுங்கள். ஊழல் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
நீட் தீர்மானத்தை திருப்பி அனுப்ப முடியாது
நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினர்களை துச்சமாக நினைத்து அதனை திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளோம். தற்போது அவர் நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை திருப்பி அனுப்ப முடியாது. அதுதான் சட்டம். ஒன்று அவராகவே வைத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அரசின் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது உள்ளாட்சி அமைப்புகள் தான். எனவே அரசின் திட்டங்களை பெற்றுத்தர தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். கட்சியால் எனக்கு என்ன லாபம் என்று பார்ப்பவன் கட்சிக்கு ஏற்பட்ட புற்றுநோய். என்னால் கட்சிக்கு என்ன லாபம் என்று நினைப்பவன் தி.மு.க.வின் ரத்தநாளம் என்று கருணாநிதி கூறுவார். அவரது வழியில் செயல்பட்டு வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் வேலூருக்கு என்று தனி மரியாதை கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.