எருது விடும் விழாவில் 400 காளைகள் பங்கேற்பு

பர்கூர் அருகே எருது விடும் விழாவில் 400 காளைகள் கலந்து கொண்டன. இதில் காளைகள் முட்டியதில் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-02-10 18:22 GMT
பர்கூர்:-
பர்கூர் அருகே எருது விடும் விழாவில் 400 காளைகள் கலந்து கொண்டன. இதில் காளைகள் முட்டியதில் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று பர்கூர் அருகே ஒரப்பம் கிராமத்தில் 75-வது ஆண்டு எருது விடும் விழா நடந்தது. விழாவில் கிருஷ்ணகிரி, பர்கூர், ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், குருப்பரபள்ளி, குந்தாரப்பள்ளி, சூளகிரி, வேலூர், ஆலங்காயம், வாணியம்பாடி, ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 400 காளைகள் கலந்து கொண்டன.
100 பேர் படுகாயம்
வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக ஓட விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகள் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடின. குறைந்த நேரத்தில் 125 மீட்டர் ஓடி இலக்கை எட்டும் காளைக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.40 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்து பரிசாக 50 காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவை ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். அப்போது காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்