455 வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்-கலெக்டர் தகவல்
திருவண்ணாமலையில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது 455 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது 455 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.
2-ம் கட்ட பயிற்சி வகுப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 1,647 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
அவர்களுக்கு அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கையாளும் முறைகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை சாரோனில் உள்ள நகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒவ்வொரு அறையாக சென்று அலுவலர்களுக்கு மேற்கொள்ளப்படும் பயிற்சியை அவர் பார்வையிட்டார்.
கண்காணிப்பு கேமராக்கள்
பின்னர் அவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 455 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 143 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.
இதனால் கண்காணிப்பு கேமரா பொருத்தி இணையதளத்தின் மூலம் நேரடி கண்காணிப்பு செய்யப்பட உள்ளது. 30 வாக்குச்சாவடிக்கு மைக்ரோ பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அதுமட்டுமின்றி 455 வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. மேலும் தேர்தல் பணிகளை கண்காணிக்க 14 வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை ரூ.3½ லட்சம் மதிப்பிலான பொருட்களும், ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.