ராமேசுவரத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான உயர்ரக போதை பொருள் பிடிபட்டது

ராமேசுவரத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான உயர்ரக போதை பொருள் சிக்கியது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ்காரர் உள்பட 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..

Update: 2022-02-10 18:08 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான உயர்ரக போதை பொருள் சிக்கியது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ்காரர் உள்பட 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..

பஸ்சில் வந்தவர் பிடிபட்டார்

ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்த ஒரு பஸ்சில் வந்து இறங்கிய நபர், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார்.. அவரை விரட்டி பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் ஒருவகையான போதை பவுடர் பாக்கெட் இருப்பது தெரியவந்தது. அந்த பவுடரை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை விசாரணைக்காக நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

8 பேர் சிக்கினர்

பிடிபட்டவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த சூரியகுமார் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து கைப்பற்றிய போதை பொருளின் எடை சுமார் 1½ கிலோ இருந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த போதை பொருளை நைஜீரியா நாட்டில் இருந்து ஈரோடு வந்த ஒருவர் மூலம் கடத்தி வந்ததாகவும் ராமேசுவரத்தில் உள்ள சில நபர்களிடம் கொடுப்பதற்காக பஸ்சில் எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 
இதை தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேசுவரம், பாம்பன், அக்காள் மடம் பகுதிகளை சேர்ந்த ேமலும் 7 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
பஸ் மூலமாக வாலிபர் கொண்டு வந்த போதை பொருள் எந்த வகையை சேர்ந்தது? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ராமநாதபுரத்தில் உள்ள தடய அறிவியல்துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஹொகைன் எனப்படும் உயர்ரக போதை பவுடர் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. 
இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நேற்று ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்தார். இந்த விவகாரத்தில் பிடிபட்டுள்ள 8 பேரில் ஒருவர் போலீஸ்காரர் என தெரியவந்தது. அவர்களிடம் கூடுதல் துணை சூப்பிரண்டு தீபக் சிவாஜ் தீவிர விசாரணை நடத்தினார்.

5 பேர் கைது

இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்டம், மேலபூவந்தியை சேர்ந்த சூரியகுமார்(27), ராமேசுவரம் எம்.ஆர்.பி.நகரை சேர்ந்த அங்குரதராம்(36), ராமேசுவரம் சின்னவன் பிள்ளை தெருைவ சேர்ந்த முகமது இஸ்மாயில் சேக்(36), பாம்பன் அக்காள் மடத்தை சேர்ந்த மனோஜ்(21), பாம்பனை சேர்ந்த சாதிக் அலி(27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸ்காரர் உள்பட 3 பேரை சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.7 கோடி

பிடிபட்ட போதை பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.7 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. 
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா, பிரவுன் சுகர், ஹெராயின், கடல் அட்டை, பீடி இலை உள்ளிட்ட பல பொருட்கள் பிடிபட்டுள்ள நிலையில் முதல் முறையாக ஹொகைன் போதை பவுடர் பிடிபட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்