மக்கள் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் சுகாதார மந்திரி வலியுறுத்தல்
மராட்டியத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி வலியுறுத்தி உள்ளார்.
குறையும் கொரோனா
நாட்டியிலேயே கொரோனா தொற்று அதிகமாக உள்ள மராட்டியத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் வேகமாக குறைந்து வருகிறது. இதையடுத்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
மும்பையில் இந்த மாத இறுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மேயர் கிஷோரி பட்னேகர் தெரிவித்தார்.
இந்தநிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-
அறிவியல் பூர்வ ஆய்வு
மராட்டியத்தில் கடந்த சில வாரங்களில் அரசு பல தளர்வுகளை அறிவித்து உள்ளது. வரும் நாட்களில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும். இருப்பினும் இதற்கு வரும் நாட்களில் மக்கள் யாரும் முக கவசம் அணிய தேவையில்லை என்று அர்த்தமில்லை.
மக்கள் முககவசத்தை அகற்ற அனுமதிக்கும் சில மேற்கத்திய நாடுகள் தங்கள் முடிவை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்.
மராட்டியத்தில் முககவசம் இல்லாமல் மாற்றுவது குறித்து எந்த ஆலோசனையும் இதுவரை நடைபெறவில்லை. மக்கள் தொடர்ந்து முககவசம் அணியவேண்டும். மேலும் அனைத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் வரும் நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.