தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கடந்த மாதம் 11-ந்தேதி அன்று தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், மணிகண்டம், திருச்சி.
கலங்கலாக வரும் குடிநீர்
திருச்சி மாநகராட்சி பெரியமிளகுபாறை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக தினமும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக குடிநீர் கலங்கலாக வருகிறது. இதனால் பொதுமக்கள் அந்த குடிநீரை பயன்படுத்த முடியவில்லை. இதனால் குடிநீருக்காக பல்வேறு தெருக்களுக்கு அலைந்து வருகின்றனர். மேலும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலங்கலாக வரும் குடிநீர் குறித்து நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பெரியமிளகுபாறை, திருச்சி.
மின்விளக்கு-சாக்கடை வசதி தேவை
திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சிக்குட்பட்ட ஐஸ்வர்யா நகர் கடைசி தெருவில் (சாய்பாபா கோவில் அருகாமையில்) மின்விளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில் தெருவில் நடக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகமாக உள்ளது. மேலும் சாக்கடை வசதியும் இல்லை. எனவே நகராட்சி நிர்வாகம் மின்விளக்கு மற்றும் சாக்கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், லால்குடி, திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் கொணலை கிராமம் தேசிய நெடுஞ்சாலையோரம் இருபக்கத்திலும் உள்ள ஓட்டல்களில் இருந்து வரும் கழிவுநீர் வாய்க்கால்களில் கலக்கிறது. இந்த கழிவுநீர் தேங்கி பல நாட்களாக துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேவியர், கொணலை, திருச்சி.
வடிகால் வசதி வேண்டும்
திருச்சி மாநகராட்சி 31-வது வார்டு வரகனேரி பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் வடிகால் வசதி இல்லாதாதால் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.