மராட்டியத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும் சந்திரகாந்த் பாட்டீல் ஆருடம்

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுக்கு பிறகு மராட்டியத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும் என சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.;

Update: 2022-02-10 17:45 GMT
கோப்பு படம்
புனே, 
உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுக்கு பிறகு மராட்டியத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும் என சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார். 
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆட்சி  அமையும்
பா.ஜனதா தொண்டர்கள் சிலர் சமீபத்தில் மாநிலத்தில் ஆட்சி செய்பவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக புகார் தெரிவித்தனர். சமீபத்தில் பா.ஜனதா தலைவர்கள் கிரித் சோமையாவும் தாக்குதலுக்கு ஆளானர். வருகிற உத்தரபிரதேச தேர்தலுக்கு பிறகு மராட்டியத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமையும் என்பதால் தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என நான் அவர்களுக்கு உறுதி அளித்தேன். 
இவ்வாறு அவர் கூறினார். 
மேலும் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தொற்றுநோய் பரவலின் போது அப்பாவி தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ஆளும் கட்சி தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
தவறான பிரசாரம்
காங்கிரஸ் தலைவர் நானா படோலே, அசோக் சவான், பாலசாகேப் தோரட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே போன்றவர்கள் பிரதமர் மோடியின் வார்த்தைகளை திரிக்க முயன்றாலும் அல்லது மக்களை தவறாக வழிநடத்த முயன்றாலும், கொரோனாவில் இருந்து தப்பி பிழைத்த சாமானியர்கள் அவரை பற்றி அறிவார்கள். 
தொற்றுநோயின் போது 80 கோடி மக்களுக்கு பிரதமர் மோடி ரேஷன் பொருட்கள் வழங்கினார். மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்க செய்தார். எனவே இதை அறிந்தவர்கள் தவறான பிரசாரத்தால் பாதிக்கப்படுவதில்லை. 
சவால் விடுகிறேன்..
ஊரடங்கு விதிக்கப்பட்ட பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு நேரம் உணவுக்கு கூட பிச்சினையை சந்தித்தனர். எனவே அவர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்தனர். பாதிக்கப்படட மக்களுக்கு ஒரு ரூபாயை கூட மாநில அரசு வழங்கவில்லை. 
கொரோனா தொற்றின்போது என்ன செய்தீர்கள் என்பது குறித்து வெள்ளை அறிக்கையை உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வெளியிடவேண்டும் என நான் சவால் விடுக்கிறேன். 
கொரோனா தடுப்பூசி, முக கவசம், பாதுகாப்பு கவச உடை, கருவிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் பரிசோதனை கருவிகளை மத்திய அரசு வழங்கியது. 
நீங்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த தவறியதால் அவர்கள் வீட்டிற்கு திரும்பி சென்றனர். இது கொரோனா பரவுவதற்கு வழிவகுத்தது. 
 நம்பிக்கை இல்லாததால்...
நாங்கள் மராட்டியத்தை எங்கே குற்றம் சாட்டினோம்? குற்றம் சொல்ல வேண்டியது மராட்டிய அரசாங்கத்தை தான். அதே நேரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மராட்டியத்திலேயே இருக்க முடியும் என நம்பியிருந்தால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் ரெயில்கள் காலியாக இருந்திருக்கும். 
உங்கள் மீது நம்பிக்கை இல்லாததால் அவர்கள் நடந்து தங்கள் ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். பிரதமர் மோடி இரக்க உணர்வு கொண்டவர் என்பதால் அவர்களுக்காக சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்தார். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்