பாண்டியர் கால மடை கல்வெட்டு கண்டுபிடிப்பு
அருப்புக்கோட்டை அருகே பாண்டியர்கால மடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாண்டியர்கால மடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கள ஆய்வு
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் தலைமையில் வரலாற்றுத்துறை மாணவர்கள் சரத்ராம், செல்வகணேஷ், ராஜபாண்டி ஆகியோர் சென்னிலைக்குடி கிராமத்தில் மேற்புற கள ஆய்வு செய்த போது பாண்டியர்கால மடைக்கல்வெட்டை கண்டறிந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
குளம், கண்மாயில் சேரும் தண்ணீரை வீணாக்காமல் தடுத்து பாசன வசதிக்காக பயன்படுத்துவதற்கு அமைக்கப்படும் ஒரு அமைப்பு மடை ஆகும். இது போன்ற அமைப்பு தற்போது திருச்சுழி அருகே சென்னிலைக்குடி கண்மாயில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மடையைச் சேர்ந்த நீர்மட்ட அளவு கல்லானது அத்தூணின் மேலே 10 அடி உயரத்தில் அழகிய வடிவமைப்புடன் காணப்படுகிறது. அதில் கிடை மட்டமாக உள்ள குறுக்கு கல்லில் வட்டெழுத்து பொறிக்கப் பட்டு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மனமே துணை
இந்த எழுத்தினை கொண்டு இக்கல்லானது 9-ம் நூற்றாண் டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு என கருதப் படுகிறது. இக்கல்வெட்டானது "ஸ்ரீ" என்ற மங்கல எழுத்துடன் தொடங்கி மனமே துணை என்ற வார்த்தையுடன் நிறை வடைகிறது. தமிழ்நாட்டில் உள்ள மடைக்கல்வெட்டில் மடை அமைத்தவரின் பெயர், அரசரின் பெயர், ஆட்சி ஆண்டு இடம் பெற்றிருக்கும் ஆனால் இந்த கல்வெட்டில் எந்த குறிப்பும் இடம்பெறாமல் மனமே துணை என்ற வார்த்தை மட்டும் பொறிக்கப்பட்டு உள்ளது. இது மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற வாக்கியத்தை உணர்த்துவதாக அமைகிறது.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள வட்டெழுத்து கல்வெட்டுக்களில் இது சற்று வித்தியாசமான கல்வெட் டாகும். கல்வெட்டுகளில் திருச்சுழி என்ற பகுதியானது பருத்திக்குடி நாட்டு தேவதானம் என்று அழைக்கப்படுகிறது.
சிவன் கோவில்
இந்தக்கல்வெட்டும் திருச்சுழி சிவன் கோவிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டும் மற்றும் அருகே உள்ள பள்ளி மடத்தைச் சேர்ந்த சிவன் கோவிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டும் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவையாகும். இந்த கல்வெட்டுக்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருப்பதால் முற்கால பாண்டியர் ஆட்சி சிறந்து விளங்கிய தாக உணர்த்தும் வகையில் உள்ளது.