மக்களை பற்றி சிந்திக்காத கட்சி அ.தி.மு.க.

நாட்டின் தலைசிறந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும், மக்களை பற்றி சிந்திக்காத கட்சி அ.தி.மு.க. என்றும் தேனி தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.

Update: 2022-02-10 17:18 GMT
தேனி: 

தேர்தல் பிரசாரம்
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தேனி மாவட்டத்தில் நேற்று சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று மாலையில் போடி கட்டபொம்மன் சிலை, தேவர் சிலை, காமராஜர் சிலை ஆகிய இடங்களில் திரண்டு நின்ற மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.

 பின்னர் தேனி பங்களாமேடு, அல்லிநகரம் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் அமைச்சர் இ.பெரியசாமி பிரசாரம் செய்தார். இந்த பிரசார நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.

பிரசாரத்தின் போது அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 8 மாத காலத்தில் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். இதனால், இந்தியாவின் தலைசிறந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று நிரூபித்து இருக்கிறார். 

அனைத்து தரப்பு மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில் தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தது. அதில் இருந்து 7 கோடி மக்களையும் காப்பாற்றிய தலைவர் மு.க.ஸ்டாலின் என்று நாடு சொல்கிறது. மக்களை பாதுகாக்க மற்ற மாநிலங்களை விட எண்ணற்ற திட்டங்களை அவர் செயல்படுத்தினார்.

மக்களை பற்றி சிந்திக்காத அ.தி.மு.க.
ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொரோனா வைரஸ் பரவியபோது ஊரடங்கு போடப்பட்டு 4 மாத காலம் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். அப்போது மக்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? என்று ஆட்சியில் இருந்தவர்கள் நினைக்கவில்லை. மக்களை பற்றி சிந்திக்காத கட்சி அ.தி.மு.க.
ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்குவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியை தி.மு.க. அரசு மக்களுக்கு வழங்கியது. சட்டமன்ற தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.

எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும், போடி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. ஆட்சியின் போது நிதி அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் என பல பதவிகளை வகித்தார். அவருடைய தொகுதிக்கு அவர் என்ன செய்தார்? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாத ஆட்சி தான் 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி.

முல்லைப்பெரியாறு
எனக்கு விவரம் தெரிந்த வரையில் தி.மு.க. ஆட்சியில் தான் போடி நகராட்சியில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், கடந்த முறை போடி நகராட்சியில் அ.தி.மு.க. சேர்ந்தவர் தலைவராக இருந்தார். அவர் நகராட்சிக்கு சொந்தமான பல கோடி ரூபாயை முறையாக செலவிடவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். மக்களின் ஆதரவோடு போடி நகராட்சியை தி.மு.க. மீண்டும் கைப்பற்றி மக்கள் விரும்பும் திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்படும். அனைத்து வார்டுகளுக்கும் தனித்தனி ரேஷன் கடைகள் அமைக்கப்படும். போடியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் கருணாநிதி. அவர் தொடர்ந்த வழக்கால் தான் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த ஆண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கையால் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து ஒரு மாத காலம் அணையின் நீர்மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டது. இதனால், விவசாயிகள் பலன் அடைந்து வருகிறார்கள்.

எனவே, உள்ளாட்சியில் மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் மூக்கையா, போடி நகர தி.மு.க. செயலாளர் செல்வராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், போடி நகரசபை முன்னாள் துணைத்தலைவர் சங்கர், தேனி நகர தி.மு.க. பொறுப்பாளர் பாலமுருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய இடங்களில் அமைச்சர் பிரசாரம் செய்தார்.

மேலும் செய்திகள்