கரூரில் சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

கரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது.

Update: 2022-02-10 17:09 GMT
கரூர்
கரூர்
களத்தில் 938 வேட்பாளர்கள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் 938 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனையடுத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தனது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் பட்டாசு வெடித்தும், மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கரூரில் வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காலை முதலே தனது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலில் விழுந்து...
பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு யுக்திகளை வேட்பாளர்கள் கையாண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தி.மு.க. வேட்பாளர்கள் தற்போதைய ஆட்சியில் செய்த திட்டங்களை கூறியும், அ.தி.மு.க.வினர் கடந்த 10 ஆண்டுகளில் செய்த திட்டங்களை எடுத்து கூறியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் பல்வேறு திட்டங்களை வார்டு மக்களுக்காக நிறைவேற்றுவோம் என கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான வேட்பாளர்கள் பொதுமக்களின் காலில் விழுந்து தங்களது வாக்கினை சேகரித்து வருகின்றனர். மேலும் கரூர் மாவட்டத்தில் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் வருகைபுரிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

மேலும் செய்திகள்