வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-02-10 16:57 GMT
தேனி: 

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி, 22 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வருகிற 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக தேனி மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளுக்கு 6 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளுக்கு 5 இடங்களிலும் என மொத்தம் 11 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், தேனி, போடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் முரளிதரன் நேற்று ஆய்வு செய்தார். 

வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடம், வேட்பாளர்கள், முகவர்கள் வந்து செல்லும் பாதை, வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க உள்ள பாதுகாப்பு அறைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இடங்கள், கணினி அறை, குடிநீர், மின்இணைப்பு, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை குறித்து அவர் ஆய்வு செய்து அரசுத்துறை அலுவலர்களிடம் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். 

அதுபோல், போடி, தேனி பகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களிலும் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். பின்னர், பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆதிப்பட்டியில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) சக்திவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்