தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-10 16:49 GMT
அரியலூர்
பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை 
அரியலூர் மாவட்டம், மேலகருப்பூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இருந்தது. அங்கிருந்து கிராமமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்கள் மூலம் வெளியிடங்களுக்கு சென்று வந்தனர். தற்போது அந்த பஸ் நிறுத்த நிழற்குடை இடிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை நிழற்குடை கட்டவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக மேலகருப்பூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேலக்கருப்பூர் கிராமத்திற்கும் மல்லூர் கிராமத்திற்கும் இடையே சர்வீஸ் சாலையும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மேலகருப்பூர், அரியலூர்.


சுகாதார நிலையம் சீரமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. எப்போது வேண்டுமானும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கட்டிடத்திற்கு உள்ளே வருவதற்கே அஞ்சுகின்றனர். பொன்னமராவதி பகுதியில் இன்றளவிலும் அதிக அளவில் பொது மருத்துவம், பிரசவத்திற்கு சிறந்து விளக்கும் சுகாதார நிலையத்தை புனரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
பொதுமக்கள், பொன்னமராவதி, புதுக்கோட்டை.


குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து மணப்பாறை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி மற்றும் கீரனூர், இலுப்பூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது. ஆனால் அச்சாலையை நெடுஞ்சாலை துறையினர் சரிவர போடாததால் ஒரு சில மாதங்களிலேயே ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதனை சரிசெய்தனர். பின்னர் மீண்டும் அதே இடத்தில் பள்ளங்கள் ஏற்பட்டு தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரமான தார்சாலையை  போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விராலிமலை, புதுக்கோட்டை. 


நாய்கள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் இலுப்பூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்கள் சாலையின் மையப்பகுதியில் படுத்து கொள்வதால், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர்  கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது.  சாலைகளில் நாய்கள் திடீரென்று குறுக்கும், நெடுக்குமாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அன்னவாசல், புதுக்கோட்டை.


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் பெரிய அளவிலான தரைமட்ட கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து நீர் எடுக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் நரிகட்டியூர் பகுதியில்  குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 4 மாதத்திற்கு மேலாக குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்.

மேலும் செய்திகள்