விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை மருத்துவமனையில் சேர்த்த பறக்கும் படையினர்
விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை தேர்தல் பறக்கும் படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே உள்ள கம்புகுத்தியூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). லாரி டிரைவர். நேற்று மாலை இவர், குஜிலியம்பாறை பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து விட்டு, அதன் வருகைக்காக காத்திருந்தனர். அந்த சமயத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரி மருதமுத்து, திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் உள்ளிட்டோர் வாகனத்தில் வந்தனர்.
அப்போது விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த செல்வத்தை கண்ட பறக்கும் படையினர் உடனடியாக வாகனத்தை நிறுத்தினர். பின்னர் அவர்கள், செல்வத்தை தங்களது வாகனத்தில் ஏற்றி குஜிலியம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பறக்கும் படையினரின் இந்த மனிதாபிமான செயலை அங்கிருந்த மக்கள் வெகுவாக பாராட்டினர்.