வேடசந்தூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 32 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி

வேடசந்தூர் அருகே பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 32 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டது.;

Update: 2022-02-10 14:48 GMT
வேடசந்தூர் :
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதா? என்பது குறித்து கண்டறிந்து அதை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 
இதையடுத்து வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் எங்கெங்கு உள்ளன? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இதில் வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 31.86 ஏக்கர் புன்செய் நிலம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யர்மடத்தில் கரூர்-திண்டுக்கல் நான்கு வழச்சாலையில் இருப்பதும், அந்த நிலம் சிலரது ஆக்கிரமிப்பில் இருப்பதும் தெரியவந்தது.
நிலம் மீட்பு
இந்த இடம் யாருக்கு சொந்தமானது என்று தெரியாமலேயே தனியார் சிலர் பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர்.
இதையடுத்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மாவட்ட உதவி ஆணையர் அனிதா தலைமையில் கோவில் செயல் அலுவலர்கள் மாலதி, சுகன்யா, ஆய்வாளர் ரஞ்சனி, வி.புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் குப்புச்சாமி மற்றும் வருவாய்த்துறையினர் அய்யர்மடம் கிராமத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் முன்னிலையில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கண்டறிந்து மீட்டனர். பின்னர் அளவீடு  செய்து கல் நடப்பட்டது. மீட்கப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எச்சரிக்கை பலகை
மீட்கப்பட்ட நிலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்நிலத்தில் அத்துமீறி நுழையவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யாரும் அதிகாரிகள் அளவீடு செய்யும்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சிைய ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்