காட்டுத்தீ பரவாமல் தடுக்க தீத்தடுப்பு கோடுகள்
தமிழக-கேரளா எல்லையில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
தமிழக-கேரளா எல்லையில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
வறட்சி
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர் பகுதிகளில் உறைபனி தாக்கம் நிலவுகிறது. மற்ற இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள், மரங்கள் காய்ந்தன. வறட்சியான காலநிலையால் புல்வெளிகள் உள்பட பசுந்தீவனங்கள் கருகியதால் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.
இது தவிர காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீத்தடுப்பு கோடுகள்
குறிப்பாக தமிழக எல்லையில் உள்ள கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் இருந்து நீலகிரி வனப்பகுதிக்கு காட்டுத்தீ பரவாமல் இருக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
வனத்துறையினர் சுமார் 6 மீட்டர் அகலத்துக்கு புற்கள், செடி, கொடிகளை வெட்டி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர். கோரகுந்தா வனப்பகுதி அருகே கேரளா வனப்பகுதிக்குள் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. தீத்தடுப்பு கோடுகள் அமைப்பதன் மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தீ பரவாமல் தடுக்கப்படும்.
அறிவுரை
இதேபோல் பிற இடங்களிலும் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்ட வன பாதுகாவலர், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், நீலகிரி வனக்கோட்ட அலுவலர் சச்சின் ஆகியோர் வனச்சரகர்களுக்கு காட்டுத்தீ ஏற்பட்டால் தீயை அணைப்பது, காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.
கிளைகளை வெட்டும் பணி
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வனப்பகுதிகளை ஒட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் கால்நடை மேய்ச்சலுக்காக புல்வெளிகளுக்கு தீ வைக்க கூடாது. வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து வரக்கூடாது.
புகை பிடித்து விட்டு வனப்பகுதியில் வீசக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரியில் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கிறது. அதன் கீழ் உள்ள மரங்களில் மின் உராய்வு காரணமாக தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் மின்கம்பிகளை ஒட்டிய மரங்கள், கிளைகளை வெட்டும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.