வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது எப்படி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது எப்படி? என்பது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-02-10 13:12 GMT
ஊட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது எப்படி? என்பது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

2-ம் கட்ட பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக 1,980 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 

இந்தநிலையில் ஊட்டி நகராட்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி முகாம், தனியார் பள்ளியில் நடந்தது. பயிற்சி முகாமை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் காந்திராஜ் தொடங்கி வைத்து பேசினார்.

2 எந்திரங்கள்

ஊட்டி நகராட்சியில் 8 மண்டல அலுவலர்கள், 396 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்களை கையாளுவது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக தலா 2 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. குழு வாரியாக மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர், வாக்குச்சாவடி முகவர், வாக்காளர்கள், வாக்காளர்களுடன் வரும் கைக்குழந்தை, மாற்றுத்திறனாளி வாக்காளர்களை வழி நடத்தும் ஒரு நபர், வாக்காளர்களை அடையாளம் காட்டும் பொது பணியாளர் அல்லது ஒரு போலீஸ் ஆகியோரை மட்டும் அனுமதிக்க வேண்டும். 

மாதிரி வாக்குப்பதிவு

வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, 2, 3 மற்றும் முகவர்கள், வாக்குப்பதிவு செய்யும் இடம் ஆகியவற்றுடன் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். உள்ளே, வெளியே போன்ற குறியீடுகள் ஒட்ட வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். 

அதை அழித்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்கு தயார்படுத்த வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் அடையாள அட்டை உள்பட 11 ஆவணங்களில் ஏதேனும் வைத்து உள்ளார்களா என்று பார்க்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக மண்டல அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பயிற்சி முகாமின் போது அலுவலர்கள் வெளியே செல்லாமல் இருக்க நுழைவுவாயில் மூடப்பட்டது.

மேலும் செய்திகள்