கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்

போலி வாரிசு சான்றை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-02-10 13:10 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே தொடர்ந்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பொன்னம்மாள் (வயது 88). இவர் தனது மகன் தனசேகரன், உறவினர்கள் ராஜதுரை, ஜெயந்தி, சமூக ஆர்வலர் ராஜேந்திரன் ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலியான வாரிசு சான்று தயாரித்த முன்னாள் தாசில்தார் வெற்றிவேல், வருவாய் ஆய்வாளர் அமுதா ஆகியோரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், 26.7.2021-ல் தமிழக முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்தும் அதை மதிக்காமல் செயல்பட்ட விழுப்புரம் கோட்டாட்சியர்கள் ராஜேந்திரன், அரிதாஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொன்னம்மாள் கூறுகையில், எனது மகன் தனசேகரன் இருக்கும்போதே எனக்கு வாரிசு இல்லை என்று போலியான சான்றை வருவாய்த்துறையினரின் துணையுடன் தயாரித்து எனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் அபகரித்துக்கொண்டார். இதுகுறித்து புகார் செய்ததன்பேரில் சுந்தர்ராஜனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில் நான், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக அளித்த புகாரின்பேரில், போலியாக வழங்கப்பட்ட வாரிசு சான்றையும், பட்டாவையும் ரத்து செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவை மதிக்காமல் எந்தவித விசாரணையும் செய்யாமல் வேண்டுமென்றே கோட்டாட்சியர் அரிதாஸ் காலம் தாழ்த்தி வருவதாக பொன்னம்மாள் குற்றம்சாட்டினார். இதையடுத்து கோட்டாட்சியர் அரிதாஸ் அங்கு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருகிற திங்கட்கிழமைக்குள் எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் சென்னை தலைமை செயலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்