நூல் விலையை குறைக்க கோரி, நாளை முதல் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி நிறுத்தம்; உற்பத்தியாளர்கள்- வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
பட்டு நூல் விலையை குறைக்க கோரி நாளை முதல் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி நிறுத்தப்படுவதாக மாவட்ட கைத்தறி பட்டு நூல் சேலை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பவானிசாகர்
பட்டு நூல் விலையை குறைக்க கோரி நாளை முதல் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி நிறுத்தப்படுவதாக மாவட்ட கைத்தறி பட்டு நூல் சேலை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கைத்தறி பட்டு சேலை உற்பத்தி
ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கைத்தறி நெசவாளர்கள் கைத்தறி பட்டு சேலை, கோரா காட்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான கைத்தறி சேலை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கைத்தறி பட்டு சேலை நெசவு செய்வதற்கான முக்கிய மூலப்பொருளான பட்டுநூல் விலை 2 மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் பட்டு சேலை தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது.
கூட்டம்
இந்த நிலையில் ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட கைத்தறி பட்டு நூல் சேலை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்க செயலாளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். பண்ணாரி அம்மன் டையிங் அசோசியேசன் தலைவர் ஆறுமுகம், ஐ வீவர் அசோசியேசன் தலைவர் குப்புசாமி, துணைச்செயலாளர் சிறுமுகை துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உற்பத்தி நிறுத்தம்
கூட்டத்தில், ‘கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பட்டு நூல் கிலோ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது உற்பத்தி குறைவு காரணமாக ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 500 வரை விற்பனையாகிறது. இதனால் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பட்டு நூல் விலை உயர்வால் பட்டு சேலைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பட்டு நூல் விலையை குறைக்க மத்திய அரசு மற்றும் ஜவுளித்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டு நூல் விலை உயர்வைக் கண்டித்தும், விலையை குறைக்க வேண்டியும் பிப்ரவரி 10-ந் தேதி முதல் (அதாவது நாளை) வருகிற 20-ந் தேதி வரை பட்டுநூல் வார்ப்பு மற்றும் நெசவு உற்பத்தியை நிறுத்தி வைப்பது. பட்டு நூல் விலை குறையவில்லை எனில் போராட்டங்கள் நடத்துவது,’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, தொட்டம்பாளையம், சதுமுகை, டி.ஜி. புதூர், சாவக்கட்டுபாளையம், சிறுமுகை, காங்கேயம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.