காருடைய அய்யனார் வீரனார் கோவில் குடமுழுக்கு
பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் காருடைய அய்யனார் வீரனார் கோவில் குடமுழுக்கு 43 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடக்கிறது.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் காருடைய அய்யனார்- வீரனார் கோவில் குடமுழுக்கு 43 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடக்கிறது.
காருடைய அய்யனார்- வீரனார் கோவில்
பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் கிராமத்தில் காருடைய அய்யனார் வீரனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் வரலாறு சிறப்பு மிக்கதாகும். ஸ்ரீரங்கத்திலிருந்து இருவர் தெற்குத் திசை நோக்கி தலையில் காருடைய அய்யனார்- வீரனார் பரிவார தெய்வங்கள் அடங்கிய பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தனர்.
ஆலத்தூர் கிராமத்தில் உள்ள வனத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது பெட்டியை தூக்கி வந்தவர் மற்றவரிடம் இந்த பெட்டியை கீழே இறக்கி வைக்கக் கூடாது. அருகில் உள்ள குளத்துக்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்றார். ஆனால் பெட்டியை நீண்ட நேரமாக தலையில் வைத்துக் கொண்டு இருந்தவர் பெட்டியின் கணம் அழுத்தவே கீழே வைத்துவிட்டார். குளத்துக்கு சென்றவர் திரும்பி வந்து பெட்டி கீழே இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். பெட்டியை இருவரும் தூக்க முயன்றபோது பெட்டியை அசைக்க முடியவில்லை. அந்த வனத்திலேயே சாமி சிலைகளை வைத்து கிராம மக்கள் வழிபட்டு வந்தனர்.
43 ஆண்டுகளுக்கு பிறக
இந்த காவிலில் கடந்த 1979-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதன் பின் 43 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு காருடைய அய்யனார்-வீரனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 6-ந் தேதி காலை விநாயகர் வழிபாடும் மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தியும் நடைபெற்றது. 7-ந்தேதி காலை சாந்தி ஹோமம், மாலை கிராம சாந்தியும் நடைபெற்றது. 8-ந்தேதி காலை மூர்த்தி ஹோமம், மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் பூஜையை தொடங்கி வைத்தார்.
குடமுழுக்கு
9-ந்தேதி காலை 2-ம் கால யாக பூஜையும் மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இன்று (10-ந்தேதி) 5-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது. நாளை காலை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு 6-ம்கால யாக பூஜையும் 8.30மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பட்டு 9.30 மணிக்கு விமான மகா குடமுழுக்கும் காலை 10 மணிக்கு மூலஸ்தானத்துக்கு குடமுழுக்கும் நடைபெறுகிறது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வீ.பாரதிதாசன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஆலத்தூர் கிராம மக்கள் மற்றும் வெளிநாடுவாழ் மக்கள் செய்து வருகின்றனர்.