தீக்குளித்து இறந்த புதுப்பெண்ணின் உறவினர்கள் மறியல்

தீக்குளித்து இறந்த புதுப்பெண்ணின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-02-09 20:29 GMT
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணிலா(வயது 26). இவரும், உடையார்பாளையம் வடக்கு காலனி தெருவை சேர்ந்த அரவிந்த் என்பவரும் காதலித்து கடந்த 5  மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று பலத்த தீக்காயங்களுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கண்ணிலா கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
சாலை மறியல்
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உதயநத்தத்தில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு நேற்று எடுத்து வரப்பட்டது. அப்போது அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணிலா மீது தீ வைத்து இருக்கலாம், இதில் உண்மை தன்மையை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியும், தா. பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் அவரது உறவினர்கள் ஆம்புலன்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் இதுசம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக ஜெயங்கொண்டம்-தா.பழூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்