சத்தியமங்கலம் அருகே வகுப்புகளை புறக்கணித்து பெற்றோர்களுடன் பள்ளிக்கூடத்தை மாணவ-மாணவிகள் முற்றுகை

சத்தியமங்கலம் அருகே கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர்களுடன் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-09 20:11 GMT
சத்தியமங்கலம் அருகே கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர்களுடன் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 150 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தில் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று திடீரென வகுப்புகளை புறக்கணித்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் காலை 9 மணி அளவில் பள்ளிக்கூட நுழைவுவாயில் முன்பு திரண்டனர். பின்னர் அங்கு உட்கார்ந்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் உதவி கல்வி அலுவலர் சரவணன் (பொறுப்பு), தாசில்தார் ரவிசங்கர், சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், சிக்கரசம்பாளையம் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கூடுதல் ஆசிரியர்கள்
அப்போது பெற்றோர்கள் கூறும்போது, ‘மொத்தம் 150 மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க 5 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2 ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தி வருகிறார்கள். இந்த 2 போில் ஒருவர் பதவி உயர்வு பெற்று அடுத்த மாதம் பணியிட மாறுதல் பெற்று செல்ல உள்ளார். இதனால் பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியர் மட்டும் இருப்பார். இவர் மட்டும் எப்படி அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தரமான கல்வியை கற்றுக்கொடுக்க முடியும். எப்படி மாணவ-மாணவிகள் கல்வி கற்பார்கள்? உடனே கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள் கூறும்போது, ‘விரைவில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடம் திரும்பினர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்