தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக மகன் கைது

மேலகிருஷ்ணன்புதூர் அருகே தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக மகனை போலீசார் கைது செய்தனர்,.

Update: 2022-02-09 19:38 GMT
மேலகிருஷ்ணன்புதூர், 
மேலகிருஷ்ணன்புதூர் அருகே தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக மகனை போலீசார் கைது செய்தனர்,.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தம்பதி தற்கொலை
மேல கிருஷ்ணன் புதூர் அருகே உள்ள சீயோன்புரத்தை சேர்ந்தவர் செல்வ ஜெயசிங். (வயது 68), கொத்தனார். இவருடைய மனைவி தங்கம் (65) இவர்களுக்கு சதீஷ் (35) ஏசு ஜெபின் ( 32) என 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சதீஷ்  திருமணமாகி தனியாக அந்த பகுதியில் வசித்து வருகிறார்.
செல்வஜெயசிங் தனது மனைவி தங்கம் மற்றும் இளைய மகன் ஏசுஜெபின் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் செல்வ ஜெயசிங், தங்கம் ஆகியோர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டனர்.
போலீசில் புகார்
தற்கொலை செய்வதற்கு முன்பு செல்வ ஜெயசிங், அதே பகுதியில் வசித்து வரும் தனது தம்பி ஞானசீலனிடம் போனில் பேசி நான் சாகப் போகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. 
இதுதொடர்பாக ஞானசீலன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதில், ‘என் அண்ணன், அண்ணிைய அவரது மகன்கள் கவனிக்கவில்லை. அதனாலேயே தற்கொலை செய்து கொண்டனர்’ என குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் 
மகன் கைது
அப்போது இளைய மகன் ஏசுஜெபினின் பேச்சுதான் அவர்களை தற்கொலை செய்ய தூண்டியது தெரிய வந்தது. அதன்பேரில் தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக ஏசுஜெபின் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
நான் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கொத்தனார் வேலை செய்து வருகிறேன். திருமணம் ஆகவில்லை. என் தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். தாயார் வீட்டு வேலைகளை கவனித்து கொண்டார். எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால் பெற்றோரை கவனிக்கவில்லை.
இந்தநிலையில் 7-ந் தேதி இரவு நான் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தகராறு செய்தேன். அப்போது வீட்டில் இருந்த சாப்பாடு, குழம்பு ஆகியவற்றை கீழே கொட்டி வீணடித்தேன்.
செத்து தொலைங்க...
அப்போது என் தந்தை வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறாயே இனி நானும் உனது அம்மாவும் உலகத்தில் இருப்பதைவிட சாவதே மேல் என கூறினார். உடனே நான், நீங்கள் இருவரும் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம். இருவரும் செத்து தொலைங்க நீங்கள் செத்தால் தான், எனது விருப்பம் போல் இந்த வீட்டில் வாழ முடியும் என்று கூறிவிட்டு தூங்க சென்றேன். அதன்பிறகு அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என பயந்து வெளியூருக்கு தப்பித்து சென்று விடலாம் என்று வல்லன் குமாரன்விளை பஸ் நிறுத்தத்துக்கு சென்ற போது, போலீசார் என்னை கைது செய்தனர். 
இவ்வாறு வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து ஏசுஜெபின் போலீசார் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்