பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 5 பேர் கைது
தக்கலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 5 ேபரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¾ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பத்மநாபபுரம்,
தக்கலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 5 ேபரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¾ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
வாகன சோதனை
தக்கலை பகுதியில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தக்கலையில் தீவிர ரோந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் 5 வாலிபர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பைகளில் 1¾ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் தக்கலை பகுதியை சேர்ந்த ஆகாஸ்செல்வம் (20), குலசேகரம் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்ராஜ் (20), ரோசன் (20), பிரவீன் (20), ரோமிராஜ் (20) என்பது தெரிய வந்தது.
இவர்கள் கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து குமரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் கஞ்சா விற்ற பணத்தில் சொகுசு வாழ்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ஆகாஸ் செல்வம் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.