நெல்லையில் வங்கியில் பயங்கர தீ விபத்து

நெல்லையில் வங்கியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் நாசமானது.

Update: 2022-02-09 19:32 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு ஸ்ரீ்புரம் சிவசக்தி தியேட்டர் செல்லும் வழியில் உள்ள ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று மதியம் 1 மணி அளவில் வங்கி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த இன்வெர்ட்டரில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் அதிலிருந்து தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்தவாறு அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர்.

இதற்கிடையே கட்டிடத்தின் மேற்பகுதியில் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனால் கட்டிடம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. இதுகுறித்து வங்கி ஊழியர்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நெல்லை மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த், பாளையங்கோட்டை நிலைய அலுவலர் வீரராஜ் மற்றும் தீயணைப்புத் துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் அந்த கட்டிடத்தில் உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்து அதன் வழியாக தண்ணீரை பீய்ச்சியடித்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதைடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஜன்னல் பகுதி முழுவதுமாக உடைக்கப்பட்டது. அதன் வழியாக தீயணைப்புத்துறையினர் உள்ளே நுழைந்து தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அப்போது புகை அதிகமாக வெளியேறியதால் தீயணைப்பு வீரர்களால் பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

இதற்கிடையே மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். மேலும் வீரர்கள் ஆக்சிஜன் கருவி பொருத்தி பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக, முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர், மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் நாசமானது. 

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு உதவி கமிஷனர் அண்ணாதுரை, சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த பயங்கர தீ விபத்தால் நெல்லை சந்திப்பு பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்