நாகர்கோவில் மாநகராட்சி- கொல்லங்கோடு நகராட்சிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

நாகர்கோவில் மாநகராட்சிக்கும், கொல்லங்கோடு நகராட்சிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-02-09 19:29 GMT
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகராட்சிக்கும், கொல்லங்கோடு நகராட்சிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகரப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கும், 4 நகராட்சிகளுக்கும், 51 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 56 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 531 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 233 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் கொல்லங்கோடு நகராட்சியில் 51 ஆயிரத்து 593 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 63 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் பார்வையிட்டார்
இவற்றுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காரவிளை சமுதாய நலக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நாகர்கோவில் மாநகராட்சிக்கும், கொல்லங்கோடு நகராட்சிக்கும் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அரவிந்த் இந்த பணியை நேரில் பார்வையிட்டார்.
காரவிளையில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு 233 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். இதேபோல் கொல்லங்கோடு நகராட்சியின் 63 வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.
நகராட்சிகள்- பேரூராட்சிகள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியின்போது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ஆஷா அஜித், கொல்லங்கோடு நகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான வெங்கடேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் அந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.

மேலும் செய்திகள்