நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணுவ வீரர்களுக்கு தபால் ஓட்டு கிடையாது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணுவ வீரர்களுக்கு தபால் ஓட்டு கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-02-09 18:27 GMT
வேலூர்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் பேரூராட்சிகளில் 178 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 819 பேர் போட்டியிடுகிறார்கள். 

தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுகிறார்கள். 3-ம் கட்ட பயிற்சியின்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ராணுவத்தில் பணிபுரியும் அதிகாரிகள், வீரர்கள் கடந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தபால் வாக்கு மூலம் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். ஆனால் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணுவ வீரர்களுக்கு தபால் ஓட்டு கிடையாது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் ராணுவ வீரர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படவில்லை. அதேபோன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அவர்களுக்கு தபால் ஓட்டு கிடையாது.

 ராணுவவீரர்களுக்கு தபால் ஓட்டு வழங்குவது என்பது நீண்ட நாட்கள் நடைமுறையாகும். அதற்கு தற்போது சாத்தியம் இல்லை என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்