திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்கள் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்களை கலெக்டர் அறிவித்துள்ளார்.;

Update: 2022-02-09 18:26 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 நகராட்சிகள், ஆலங்காயம், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளில் வருகிற 19--ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

அதன்படி நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் பஸ் நிலையம், எம்.ஜி.ஆர். திருமண மண்டபம், திருப்பத்தூர் நகராட்சியில் பழைய பஸ் நிலையம், புதுப்பேட்டை ரோடு சந்திப்பு, கோட்டைத் தெரு ஆலமரம் அருகிலும், ஜோலார்பேட்டை நகராட்சியில் அரசு சிறு விளையாட்டு அரங்கம், ரெயில் நிலையம் - திருப்பத்தூர் சாலை சந்திப்பு, கே.ஜி.எஸ். மஹால், வாணியம்பாடி நகராட்சியில் இஸ்லாமியக் கலைக்கல்லூரி எதிரில் உள்ள மைதானம், ஜின்னா ரோடு சந்திப்பு, சர்க்கஸ் மைதானத்திலும், ஆலங்காயம் பேரூராட்சியில் பஸ் நிலையம், ராஜலட்சுமி, வாசவி திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களிலும், ஆம்பூர் நகராட்சியில் பைபாஸ் சாலை, ரெட்டித் தோப்பு, மோட்டுக்கொல்லை- மளிகைத்தோப்பு பகுதியிலும், உதயேந்திரம் பேரூராட்சியில் சரவணன் மஹால் ஆகிய இடங்களில் மட்டுமே அரசியல் கட்சிகள் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு காலை 8 மணி முதல் இரவு 8 வரை மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். நெறிமுறைகளை மீறும் அரசியல் கட்சியினர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்