குடியாத்தத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி ரெயில் மோதி பலி
குடியாத்தத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி ரெயில் மோதி பலியானார்.
ஜோலார்பேட்டை
குடியாத்தத்தை அடுத்த குரு நாதபுரம், அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது42). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை மேல்ஆலத்தூர்- வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற டபுள்டக்கர் விரைவு ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயராமன் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த மரிமானிக்குப்பம் பூங்குளம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் கார்த்திக் (24). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வாணியம்பாடி- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்பொழுது அந்தவழியாக ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரெயிலில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.