தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள்தொடர்பான பதிவுகள

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

Update: 2022-02-09 18:21 GMT
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 


பாம்புகள் நடமாட்டம் 

  கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் பாம்புகள் மற்றும் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன. குறிப்பாக கொடிய விஷம் கொண்ட பாம்புகள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. குறிப்பாக உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைக்கு அருகே அதிகளவில் நடமாடி வருகின்றன. இதனால் நோயாளிகள் அச்சத்துடன் இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு நடமாடி வரும் பாம்புகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்.
  ஜான், கோத்தகிரி.

போக்குவரத்துக்கு இடையூறு

  பொள்ளாச்சி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இந்த அலுவலகம் சாலையின் ஓரத்தில் இருப்பதால், அங்கு நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. சில நேரத்தில் விபத்துகளும் நடந்து வருகின்றன. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாறுமாறாக வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
  நாதன், பொள்ளாச்சி.

பஸ் இயக்கப்படுமா?

  சூலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 30 ஜி என்ற எண் கொண்ட அரசு பஸ் உக்கடம் முதல் சோமனூர் வரை ஒரே வழித்தடத்தில் 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பஸ்சை குமாரபாளையம் வழியாக சோமனூருக்கு இயக்கினால் ஏராளமான பயணிகள் பயன்பெறுவார்கள். எனவே அதை செய்ய போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முன்வர வேண்டும்.
  அய்யாசாமி, சோமனூர்.

குண்டும் குழியுமான சாலை

  கோவை காந்திபார்க் முதல் சுண்டப்பாளையம் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் மட்டும் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  பாரத், வேடப்பட்டி.

சுற்றுச்சூழல் பாதிப்பு

ஊட்டி அருகே கடநாடு கிராமத்தில் உள்ள சாலையோரத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால் கரும்புகை எழுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, குப்பைகள் திறந்தவெளியில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திவ்யா, தேனாடுகம்பை.

சாக்கடை கழிவுநீர்

  ஊட்டி கமர்சியல் சாலை நடைபாதையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வருகின்றனர். சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. துர்நாற்றம் தாங்க முடியாமல் பொதுமக்கள் மூக்கைப் பொத்தியபடி நடந்து செல்கின்றனர். ஆகவே, இதற்கு தீர்வு கண்டு சரிசெய்ய வேண்டும்.
  பழனி, ஊட்டி.

சாலையில் பள்ளம் 

  கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்து தனியார் பள்ளி வழியாக திருச்சி சாலை செல்லும் சாலையின் சந்திப்பு பகுதியில் பள்ளமாக இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  ரகு, கோவை.

ஓட்டை விழுந்த குப்பை தொட்டி

  கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் 2 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த குப்பை தொட்டிகள் ஓட்டைவிழுந்து காணப்படுவதால் அதில் போடப்படும் குப்பைகள் கீழே விழுகிறது. அந்த குப்பைகளை நாய்கள் சாலையில் இழுத்து போடுவதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓட்டை விழுந்த குப்பை தொட்டிகளை மாற்ற வேண்டும்.
  மூர்த்தி, ராமநாதபுரம்.
  
விபத்தை ஏற்படுத்தும் சாலை

கோவை- சத்தி ரோட்டில் அத்திப்பாளையம் பிரிவு அருகே தனியார் வங்கி எதிரே சாலையில் பெரிய அளவில் பள்ளம் இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த பள்ளத்துக்குள் விழுந்து விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
மனோகரன், கோவை.

புதர்மண்டி கிடக்கும் நடைபாதை

  கோவை புட்டுவிக்கி சாலையில் உள்ள பேரூர் பெரியகுளம் கரையில் நடைபாதை அமைக்கப்பட்டு அதன் ஓரத்தில் செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் புதர்கள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் விஷப்பாம்புகளின் நடமாட்டம் அதிக மாக உள்ளது. இதனால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அங்கு சூழ்ந்து இருக்கும் புதர்களை அகற்ற வேண்டும்.
  பாலகிருஷ்ணன், கோவைப்புதூர்.
  

  

மேலும் செய்திகள்