சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் தந்ைதயுடன் போக்சோவில் கைது
வெள்ளோடு அருகே சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் தந்தையுடன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வெள்ளோடு அருகே சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் தந்தையுடன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சிறுமி கடத்தல்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன்னுடைய 16 வயது மகளை கடந்த 6-ந் தேதி முதல் காணவில்லை என 7-ந் தேதி வெள்ளோடு போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் கட்டிட தொழிலாளி முருகேசன் (வயது 20) என்பவர் காணாமல் போன சிறுமியுடன் வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
தந்தை-மகன் கைது
அப்போது போலீசில் முருகேசன் சிறுமியை கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகவும், கடந்த 6-ந் தேதி சிறுமியை அழைத்து கொண்டு மேட்டூரில் உள்ள தனது தந்தையிடம் சென்றதாகவும், பின்னர் மறுநாள் 7-ந் தேதி எடப்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமியை அழைத்து சென்றதாகவும், அங்கு கிட்டாம்பட்டி என்ற ஊரில் உள்ள ஒரு கோவிலில் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாகவும் முருகேசன் தெரிவித்துள்ளார். மேலும் முருகேசனிடமும், சிறுமியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் சிறுமியை அவரது வீட்டுக்கு தெரியாமல் கடத்தி சென்று திருமணம் செய்ததில் முருகேசனின் தந்தை ரத்தினத்துக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளோடு போலீசார் நேற்று முருகேசனையும் அவரது தந்தை ரத்தினத்தையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.