திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல் அரசு வழங்கிய வீட்டு மனையை அளவீடு செய்ய கோரிக்கை

Update: 2022-02-09 17:55 GMT

அரசூர்

தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெண்ணைவலம் கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் 100 பேருக்கு கடந்த 2004-ம் ஆண்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட பட்டாவுக்குரிய நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்து வழங்கவில்லை எனவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து பெண்ணைவலம் கிராமமக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது வீட்டு மனைப்பட்டாவுக்குரிய நிலத்தை முறையாக அளவீடு செய்து ஒப்படைக்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் கடலூர்-சித்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்