மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்த நெல் அறுவடை எந்திரம்

கச்சிராயப்பாளையம் அருகே மின்கம்பியில் உரசியதால் நெல் அறுவடை எந்திரம் தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

Update: 2022-02-09 17:51 GMT
கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாதவச்சேரியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. 
இதையடுத்து அறுவடை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக நெல் அறுவடை எந்திரம் நேற்று மதியம் வரவழைக்கப்பட்டது. டிரைவர் அய்யப்பன், எந்திரம் மூலம் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தார். 

எந்திரத்தில் தீ 

அப்போது நெல் அறுவடை எந்திரத்தின் மேற்கூரை, அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது உரசியது. இதில் நெல் அறுவடை எந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன், நெல் அறுவடை எந்திரத்தை நிறுத்தி, அதில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் நெல் அறுவடை எந்திரம் முற்றிலும் எரிந்து சேதமானது.

மின்தடை 

சடையம்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்படும் மின் கம்பிகள் மீதுதான் நெல் அறுவடை எந்திரம் உரசியது. இந்த விபத்தால் மின்கம்பிகள் சேதமானதால் கச்சிராப் யபாளையம், வடக்குநந்தல், வெங்கடாம்பேட்டை, மாதவச்சேரி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மின்தடை ஏற்பட்டது. மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். சேதமடைந்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்